காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளாலும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களாலும் நாட்டுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
மிசோரம் மாநிலம் அய்ஸாலில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைகளாலும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களாலும் கைமேல் பலன் கிடைத்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் சராசரி பொருளாதார வளர்ச்சி சாதனை அளவை எட்டியுள்ளது.
நாட்டில் இதுபோன்ற சராசரி வளர்ச்சி விகிதம் எந்த 10 ஆண்டுகளிலும் இருந்ததில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்து வரும் 2004ம் ஆண்டிலிருந்தே நாட்டிலிருந்து வறுமை நிலை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டில் இருந்ததைவிட இப்போது வறுமை நிலை மூன்றில் ஒன்று என்கிற விகிதமாக குறைந்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் மேம்பட்டு சராசரி ஆயுட்காலம் கடந்த பத்தாண்டுகளில் 5 ஆண்டு அதிகரித்திருக்கிறது. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவந்து ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தான் செய்யும் பணிக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கல்வி உரிமை, உணவுக்கு உத்தரவாதம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவை காங்கிரஸ் கூட்டணி அரசின் மகத்தான சாதனைகள். தகவல் உரிமை சட்டமானது, அரசு அதிகாரிகள் ஒரு முடிவை எப்படி எடுத்தார்கள் என்பதை பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வகை செய்கிறது. கல்வி உரிமை சட்டத்தின் மூலம் எல்லா குழந்தைகளும் ஆரம்பக்கல்வி பெறுவது நிச்சயமாகிறது.
பழங்குடிகளின் நலன் கருதி, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் நிலங்களை அவர்களுக்கே சொந்தமாக்கிட வகை செய்யும் சட்டத்தை இந்த அரசு இயற்றியுள்ளது. பழங்குடிகளின் சமூக பொருளாதார நிலைமை பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவர்களுக்கு ஏற்ற வகையில் நலத் திட்டங்கள், கொள்கைகள் வகுக்கப்படும்.
வீடின்றி ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்காக புதிய திட்டம் ஒன்றை அரசு விரைவில் தொடங்க இருக்கிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் போதிய வீட்டு வசதியின்றி இருக்கும் நிலைமை மத்திய அரசுக்கு தெரியவந்துள்ளது. இதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாநில முதல்வர் லால் தான்ஹாவ்லா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் லூசிநோ பெலைரோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.