தாத்ரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் மாட்டிறைச்சி வைத்திருந்தது உண்மைதானா என்பது குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 2015 செப்டம்பர் 28-ல் உத்தரப் பிரதேசம் தாத்ரி அருகேயுள்ள பிசாடா கிராமத்தில் மாட்டிறைச்சி வைத் திருந்ததாக முகமது இக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீ ஸார் 20 பேரை கைது செய்தனர்.
முகமது இக்லாக் வீட்டில் கைப் பற்றப்பட்ட இறைச்சி பல்வேறு ஆய்வகங்களில் சோதனைக்கு அனுப் பப்பட்டது. அப்போது அது மாட் டிறைச்சி இல்லை, ஆட்டிறைச்சி என்று அறிக்கைகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் மதுராவில் உள்ள உத்தரப் பிரதேச அரசு ஆய்வகம் நடத்திய சோதனை அறிக்கை கடந்த மே 31-ம் தேதி வெளியிடப் பட்டது. அதில் முகமது இக்லாக் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறைச்சி பசுவின் இறைச்சி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் தாத்ரி விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் முகமது இக்லாக் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிசாடா கிராம மக்கள் கடந்த 2-ம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். ஆனால் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பிசாடா கிராம மக்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அதில் 20 நாட்களுக்குள் முகமது இக்லாக் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இல்லை யெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இதன்காரணமாக உத்தரப் பிரதேசத் தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்தப் பின்னணியில் முகமது இக்லாக் குடும்பத்தினர் வைத்திருந்தது மாட்டிறைச்சியா அல்லது ஆட் டிறைச்சியா என்பது குறித்து போலீஸார் நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஆர்.கே.சிங், முதல்கட்ட விசாரணையை நடத்தியுள்ளோம், சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆதாயம் அடையும் நோக்கத்தில் தாத்ரி விவகாரத்தை பாஜக மீண்டும் கிளப்புவதாக காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மறுத்துள்ளார். அவர் கூறியபோது, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. அரசு ஆய்வகம்தான் அறிக்கை அளித் துள்ளது. அப்படியிருக்கும்போது பாஜகவை குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.