இந்தியா

வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யவேண்டும்: கர்நாடக அரசுக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை

இரா.வினோத்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல், வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரை விடுதலை செய்யவேண்டும் என கர்நாடக அரசுக்கு இங்குள்ள தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

1993 ம் ஆண்டு மாதேஸ்வரன் மலையில் உள்ள பாலாறு பாலத்தை சந்தனக் கடத்தல் வீரப்பன் தகர்த்த வழக்கில் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப் பிரகாசம் ஆகிய நால்வரும் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நால்வரும் கடந்த 21 ஆண்டுகளாக கர்நாடகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனு மீதான தாமதம் காரணமாக உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 21-ம் தேதி ரத்து செய்தது. மேலும் இவர்கள் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என கூறியது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரை தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டது போல், இவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என இங்குள்ள தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பாக கர்நாடக கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன்

‘தி இந்து'விடம் பேசுகையில், “பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் வீரப்பனின் கூட்டாளிகள் இல்லை. ஏழை கூலித் தொழிலாளர்களான இவர்கள் அப்பாவிகள். ஆயுள் தண்டனை கைதியை காட்டிலும், அதிக காலத்தை நால்வரும் சிறையில் கழித்துவிட்டனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கர்நாடக தமிழர்கள் சார்பில் கர்நாடக முதல்வர் மற்றும் ஆளுநரை வியாழக்கிழமை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்ப விருக்கிறோம்” என்றார்.

நோயால் வேதனை!

இந்நிலையில் இவர்கள் நால் வரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. மீசை மாதையனுக்கு தற்போது 73 வயது. பிலவேந்திரனுக்கு 68ம், ஞானப்பிரகாசத்திற்கு 70ம், சைமனுக்கு 65ம் வயதாகிறது. இவர்கள் வயதியோகம் காரண மாக அடிக்கடி பலவீனம் அடைகி றார்கள்.

உடல், மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் சிறையில் இருக்கும் மருத்துவமனயில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இதில் குறிப்பாக சைமன் ஏராளமான நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெல்காம் இண்டெலகா சிறையில் இருந்தபோது அவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது. அவருக்கு 2 முறை ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதயக் கோளாறு மட்டுமன்றி அவருக்கு கடுமையான காசநோயும் இருப்பதால் அவரை உடனே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து சைமன் சில மாதங்களுக்கு முன் பெங்களூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் அவருக்கு பார்வைக்கோளாறு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு பெங்களூர் நாராயண நேத்ராலாயா மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீரப்பன் கூட்டாளி களாக கூறப்படும் சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள மாத்ரஹள்ளி மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த இவர்களை கர்நாடக அதிரடிப் படையினர் 1993-ஆம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகள் என கைது செய்தனர்.

SCROLL FOR NEXT