இந்தியா

மாநில ஒற்றுமைக்கு குரல் கொடுப்பவரே பிரதமர்- ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு

செய்திப்பிரிவு

ஆந்திர மாநில ஒற்றுமைக்காக குரல் கொடுப்பவரையே நாம் பிரதமர் ஆக்குவோம் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நான்காவது கட்டமாக சங்கே முழங்கு எனும் மாநில ஒற்றுமையை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சித்தூர் மாவட்டத்தில், நகிரி,சத்தியவேடு மற்றும் கங்காதரநெல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில், சத்தியவேடு தொகுதி நாராயணவனம் பகுதியில் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலையை திறந்து வைத்து ஜெகன் பேசியதாவது: மாநில வளர்ச்சிக்காக ஒய்.எஸ்.ஆர். பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தினார்.

ஆனால் அவரது மறைவிற்கு பின்னர், தற்போதைய அரசு பல்வேறு திட்டங்களை முழுமையாக அமல்படுத்தாமல் நிறுத்திவிட்டது. ஒய்.எஸ்.ஆரின் ஆட்சி காலம் ஆந்திராவின் பொற்காலம். ஆனால், அவரது மறைவிற்குப் பின்னர் மாநிலத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது; அரசியல் சீரழிந்துவிட்டது. சுயநலம் பெருகிவிட்டது. இந்த அரசியல் நடைமுறை மாறவேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில், 30 தொகுதிகளை நாம் கைப்பற்றினால், இந்த மாநிலத்தை யாரால் பிரிக்கமுடியும் எனப் பார்க்கலாம். ஆந்திர மாநில ஒற்றுமைக்காக குரல் கொடுப்ப வரையே நாம் இந்த நாட்டின் பிரதமர் ஆக்குவோம்.

இவ்வாறு ஜெகன் பேசினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மாநில செயற்குழு உறுப்பினர் ரோஜா, எம்.எல்.ஏ க்கள் அமர்நாத்ரெட்டி, பிரவீண் குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து

கொண்டனர்.

SCROLL FOR NEXT