பாட்னா தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளியை நெருங்கி வருவதாக தேசிய புலனாய்வு மையம் (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதியன்று பாட்னாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, மற்றும் போத்கயா குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக பொக்காரோவைச் சேர்ந்த மாணவியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் இருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக என்.ஐ.ஏ விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் விபரங்களை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி உஜ்ஜைர் அகமத் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
உஜ்ஜைர் அகமத், பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளியான இம்தியாஸ் அன்சாரி, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த தாரிக் என்ற அய்னுல் ஆகிய 3 பேருமே ராஞ்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.