முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டீகரில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.நான்கு முறை எம்.பி.யான அவருக்கு இத்தேர்தலில் சண்டீ கரில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது. சண்டீகரில் ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கலின்போது பன்சாலின் மனைவி மது, மகன் மணீஷ், நகர மேயர் கல்யாண் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள், கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்க லுக்குப் பின் செய்தியாளர்களிடம் பன்சால் கூறியது:
எனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப நடந்து கொள்வேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சண்டீகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ரயில்வேயில் பணம் பெற்றுக் கொண்டு உயர் பதவிகளை அளித்ததான குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து பன்சால் விலகினார். ரூ.10 கோடி லஞ்சம் பெற்றதான இந்த வழக்கில் பன்சாலின் சகோதரரின் மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு நடை
பெற்று வருகிறது. ஆனால் பன்சால் மீது தவறு ஏதுமில்லை என்று கூறி ஜூலை மாதம் சிபிஐ அவரை விடுவித்தது. சண்டீகரில் பன்சாலை எதிர்த்து போட்டியிடும் முக்கிய வேட்பாளர் மூவரும் பெண்கள். ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் மிஸ் இந்தியா குல் பனாக், பாஜக சார்பில் நடிகை கிரோன் கர், பகுஜன் சமாஜ் சார்பில் ஜேனட் ஜகான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.