இந்தியா

ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் பதிலளிக்க மாட்டார்: வெங்கய்ய நாயுடு திட்டவட்டம்

பிடிஐ

'ரூ.500, 1000 நடவடிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க மாட்டார், இப்படிப்பட்ட கோரிக்கையின் மூலம் எதிர்க்கட்சிகள் விவாதத்தை முடக்க முயற்சி செய்கின்றன' என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

விவாத்தில் மோடி பங்கேற்று கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து பேரவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கய்ய நாயுடு, “அவையின் விதிகளின் படியும், முந்தைய நடவடிக்கைகளின் முன்னுதாரணங்களின் படியும் பிரதமர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை, சம்பந்தப்பட்ட அமைச்சரும் மற்றவர்களும் பதில் அளித்தால் போதுமானது.

இத்தகைய விவாதத்தை அவர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி பாதியிலேயே புரிந்து கொண்டனர் இது அவர்களுக்கு எதிராகத் திரும்பும் என்பதை. இப்போது, அவர்கள் இதிலிருந்து வெளியே வர சிலபல உத்திகளைக் கையாண்டு, ஏதோ சில சாக்குபோக்குகள் சொல்லி விவாதத்தையே முடக்குவார்கள் என்று நான் இப்போது அஞ்சுகிறேன்.

இவர்கள் ஆர்ப்பாட்டம் விவாதத்தை முடக்கவே. இதன் பின்னணியில் என்ன நோக்கம் இருந்தாலும் இதனை நியாயப்படுத்த முடியாது.

விவாதத்தை தொடங்கியவர்கள் தற்போது அது எதிர்மறை திசையில் போய்க்கொண்டிருப்பதை புரிந்து கொண்டு இதன் மூலம் விவாதத்தை நடைபெற முடியாமல் தடுக்கின்றனர் அதற்கு ஒரு சாக்குதான் பிரதமர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை.

யார் யார் பதுக்கல்காரர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர் யார் யார் மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பிரதமரின் புரட்சிகர நடவடிக்கையா பதுக்கல்காரர்கள் ஆதரவாளர்களா என்பதற்கு இடையே மக்கள் தங்கள் தெரிவை மேற்கொண்டாக வேண்டும்.

எதிர்க்கட்சிகள் இரட்டை நாக்குடன் பேசுகின்றனர், பல்வேறு குரல்களில் பேசுகின்றனர். திறந்த மனதுடன் இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றனரா எதிர்க்கின்றனரா என்று கூற மறுக்கிறார்கள்.

விவாதம் நடக்கட்டும், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார். மரபுகள் மற்றும் விதிமுறைகளின்படி அரசின் தீர்வு அமையும்.

அமைப்பை சீர்தூக்க எந்த ஒரு கருத்தையும், ஆலோசனையையும் வரவேற்கிறோம். ஆனால் இந்த நடவடிக்கைக்கு நோக்கம் கற்பிப்பது, இதனை கேள்விக்குட்படுத்துவது என்று சென்றால் மக்கள்தான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் இந்தக் கொள்கைக்கு ஆதரவா, எதிர்ப்பா என்பதை முடிவு செய்யட்டும். ஆனால் இந்தக் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை” என்றார் வெங்கய்ய நாயுடு.

SCROLL FOR NEXT