ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்நாள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பேசினர்.
நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது: பாஜகவை பொறுத்தவரை ஏழைகளை வாக்கு வங்கியாகக் கருதவில்லை. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற்காக தற்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நீண்ட கால பலன்களை அனுபவிக்க முடியும். குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.
பணமதிப்பு நீக்கத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. எனினும் ஏழை மக்கள் அவற்றை சகித்துக் கொண்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானங்கள்
இந்த செயற்குழு கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட்டன. கூட்டத்தின் நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘‘பணமதிப்பு நீக்கம் ஒரு புனித நடவடிக்கை. தற்போதைக்கு சில சிரமங்கள் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட காலத்துக்கு பலன்களைத் தரும். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும். ஏழைகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
வங்கிகளில் டெபாசிட் தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதனால் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதேபோல பல்வேறு நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்.
நாட்டில் மொத்தம் 107 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 35 கோடி ஸ்மார்ட் போன்கள் உள்ளன. நாடு முழுவதும் 147 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 117 கோடி சேமிப்பு கணக்குகள், 25 கோடி ஜன்தன் கணக்குகள். இதுவரை 40 கோடி வங்கிக் கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளன. 75 கோடி டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த அடிப்படை கட்ட மைப்பை கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனையை வெற்றிகரமாக செயல்படுத்தலாம். இதனால் வரிஏய்ப்பு முற்றிலுமாக தடுக்கப் படும்’’ என்று பாஜக செயற் குழு தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.