சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் காங்கிரஸ் கூட்டணியைவிட சற்று அதிகரித் துள்ளது. ஆனாலும் பெரும் பான்மை பலம் கிடைக்கவில்லை.
57 மாநிலங்களவை உறுப்பினர் களின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய உறுப் பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 30 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டி இருந்ததால் மீதம் உள்ள 27 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 245 உறுப் பினர்களைக் கொண்ட மாநிலங் களவையில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிக்கும். இது இப்போது உள்ள எண்ணிக்கையைவிட 5 அதிகம். அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பலம் 74-லிருந்து 71 ஆகக் குறையும்.
மாநிலங்களவையில் பிராந்திய கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆகவே நீடிக்கும். இதில் அதிகபட்சமாக சமாஜ்வாடி 19 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே இருந்ததைவிட 4 அதிகம்.
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுக்கு மொத்தமாக 12 உறுப்பினர்கள் உள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் (12) அதிமுக (12), பகுஜன் சமாஜ் (6), கம்யூனிஸ்ட் (8), பிஜு ஜனதா தளம் (7), திமுக (5) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் வேறு சில கட்சிகளுக்கு ஓரிரு இடங்கள் உள்ளன. இதுதவிர நியமன உறுப்பினர்கள் 12 பேர் உள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் மாநிலங்களவையில் இல்லை. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திணறி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இவற்றின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது.