கேரளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, சுற்றுச்சூழலில் ஆர்வம் மிக்க பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை பார்வையிட்டார். அங்குள்ள தாவர மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை வெகுவாக பாராட்டினார்.
இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் சார்லஸும் அவரது மனைவி கமீலா பார்க்கரும் தங்களது 4 நாள் கேரள சுற்றுப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினர். முதல் நாளில் கொச்சி அருங்காட்சியகத்துக்கு சென்ற அவர்கள், கேரள கலை பொக்கிஷங்களை கண்டு வியந்தனர். அங்கு நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் அவர்கள் ரசித்தனர்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வழச்சல் வனப்பகுதியைப் பார்வையிட்டார் சார்லஸ். அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் டபிள்யூடபிள்யூஎப்-இந்தியா உள்ளிட்ட வனப்பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளுடன் உரையாடினார். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாப்பதில் உள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கதார் இன பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார் சார்லஸ். வனப்பகுதியை பாதுகாப்பது தொடர்பாக, டபிள்யூடபிள்யூஎப்-இந்தியா அமைப்பு கடந்த 3 ஆண்டுகளாக கதார் பழங்குடி மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான போராட்டத்தை சமாளிப்பதில் உள்ள சவால்கள் குறித்தும் சார்லஸுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. யானை களின் நடமாட்டத்தை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பது தொடர்பான சிறிய விடியோ காட்சியும் அவருக்கு காட்டப்பட்டது.
இதுதவிர, புலிகள் கண்காணிப்பு மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் குறித்தும் சார்லஸிடம் டபிள்யூடபிள்யூஎப் இந்தியா திட்ட இயக்குநர் செஜல் வொரா விளக்கிக் கூறினார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டு வரும் முயற்சியை சார்லஸ் பாராட்டினார்.