முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் எக்காலத் துக்கும் பொருத்தமானவை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நேருவின் 125-வது பிறந்த தின விழாவையொட்டி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் நிறைவு நாளான நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: வரலாற்றிலிருந்து நேருவின் பணி களை மறக்கடிக்கச் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதிகாரப்பகிர்வு உள் ளிட்ட நேருவின் கொள்கைகள் அனைத் தும், எக்காலத்துக்கும் பொருத்த மானவையாகும்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறும்போது, “நேருவின் கொள்கை களை அனைவரும் பின்பற்ற வேண் டும். ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதச்சார் பின்மை ஆகியவற்றுக்காக போராட வேண்டும். நேருவின் கொள்கைகள் அனைத்துப் பிரிவினரின் நலனை முன்னிறுத்தும் வகையில் அமைந் துள்ளன. அதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, “நேருவின் கருத்துகள் உலகின் எப்பகுதி மக்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளன. தனி நபர் ஒவ்வொருவரும் உரிமையை பெற வேண்டும் என்பதே நேருவின் அரசியல் தத்துவமாக இருந்தது.
நாட்டில் பொதுத்துறையும், தனியார் துறையும் கலந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தியது நேருதான். சோஷலிசத்தை தனது வாழ்க்கை முறையாகவே நேரு கொண்டிருந்தார்” என்றார்.
கானாவின் முன்னாள் அதிபர் ஜான் குபார் பேசும்போது, “இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் போக்குகள் காணப்படு வது குறித்து உலக மக்களை எச்சரிக்க வேண்டும். நேருவின் தொலைநோக்கு சிந்தனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று அமைதியை நிலை நாட்ட முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இக்கருத்தரங்கில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் கலந்து கொண்டார்.
‘தடைகளை ஏற்படுத்திய பாஜக’
நேரு பிறந்த நாள் கருத்தரங்குக்கு மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, “இந்த கருத்தரங்கு நடைபெறக்கூடாது என பாஜக அரசு விரும்பியது. இக்கருத்தரங்கை நவம்பர் 14-ம் தேதி டெல்லி விஞ்ஞான பவனில் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், கிடைக்கவில்லை. அதனால், 17, 18-ம் தேதிகளில் நடத்தியுள்ளோம்.
கருத்தரங்கை நடத்துவதில் எங் களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இக்கருத்தரங்கு தொடர்பான செய்திகளுக்கு தொலைக் காட்சி சேனல்கள் உரிய முக்கியத்துவம் தரவில்லை. உலகத் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டம் தொடர்பான செய்தி வெளியீடு எதிர்பார்த்தபடி இல்லை” என்றார்.