தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள ஆடம்பர பங்களாவின் விலை ரூ. 85 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத்தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்களா அக்டோபர் மாதம் 19-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை ஏலம் விடும் நடைமுறை தொடங்கியுள்ளது. இதில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள ஆடம்பர பங்களாவும் ஒன்றாகும்.
கோவாவின் கன்டோலிம் கடற்கரைப் பகுதியில் 12,350 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த பங்களா.
இந்த பங்களாவில் மூன்று பிரம்மாண்டமான படுக்கையறைகள் மற்றும் மிகப் பெரிய ஹால் உள்ளது. இவற்றின் மர வேலைப்பாடுகள் முழுவதும் தேக்கு மரத்தால் ஆனவை. கோவாவின் புகழ்பெற்ற டீன் டி குரூஸ் என்ற வடிவமைப்பாளரரால் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டவை.
இந்த பங்களாவை ஏலம் விடும் பணியை எஸ்பிஐ கேப் அறக்கட்டளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த பங்களாவை இம்மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் பார்வையிடலாம். அதேபோல அக்டோபர் மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளிலும் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
மல்லையா 17 வங்கிகளில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பெற்றுள்ள கடன் தொகை ரூ. 6,963 கோடிக்கு யுனைடெட் பிரூவரீஸ் நிறுவனம் உத்தராவதமாக அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்தை ஏலம் விட மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. மும்பை விமான நிலையம் அருகே அமைந்துள்ள இந்தக் கட்டிடத்துக்கான விலை ரூ. 150 கோடியிலிருந்து ரூ. 135 கோடியாகக் குறைக்கப்பட்ட போதிலும் அதை ஏலத்தில் எடுக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் மல்லையாவின் கோவா பங்களாவுக்கு ரூ.85 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.