வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தகவல்களை முகநூலுக்கு பரிமாற்றம் செய்வது தொடர்பான வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்தி மாற்றத்துக்கான பிரபல செயலி (ஆப்) வாட்ஸ் அப், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘‘வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தொலைபேசி எண்கள் உட்பட அனைத்து விவரங்களும் வர்த்தக ரீதியாக முகநூலுடன் (வாப்ஸ் அப்பின் மூல நிறுவனம்) பகிர்ந்து கொள்ளப்படும். இதில் விருப்பம் இல்லாதவர்கள் செப்டம்பர் 25-ம் தேதிக்குள் சேவையில் இருந்து விலகிக் கொள்ளலாம். அதன்பிறகு வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தகவல்கள் முகநூலுடன் பகிர்ந்து கொள்ளப்படும்’’ என்று அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. அதில் வாட்ஸ் அப், முகநூல் ஆகியவை கோடிக்கணக்கான இந்தியர்களின் அந்தரங்க தகவல்களை வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வுவிசாரித்தது. பின்னர், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றம் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதற்கிடையில் இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த போது, ‘‘வாட்ஸ் அப் சேவையில் இருந்து 2016, செப்டம்பர் 25-க்குள் விலகிக் கொள்ளும் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கு வாட்ஸ் அப் நிறுவனம், ‘‘வாட்ஸ் அப் செயலியில் ஒருவரின் கணக்கில் நீக்கப்பட்டால், அவருடைய எல்லா தகவல்களும் சர்வரில் இருந்து போய்விடும்’’ என்று உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக செயலிகளை சட்டப்பூர்வ ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யும்படி மத்திய அரசு மற்றும் டிராய்க்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.