பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயங்கரவாதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்காவின், பயங்கரவாதிகள் பற்றிய தகவல் மையம் பராமரித்து வரும் உலகளாவிய பயங்கரவாத வலைப்பின்னல் மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெரிஷி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வெர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்க பயங்கரவாத தகவல் மையத்திடம் சுமார் 11,000 பயங்கரவாதிகள் பற்றிய தகவல் பெட்டகம் உள்ளன. அதாவது பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் நாடு, பிறந்த தேதி, படங்கள், கைரேகை, மற்றும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை இந்த தகவல்களில் அடங்கும்.
இத்தகைய தகவல் பரிமாற்றத்துக்கான முதல் முயற்சியை அமெரிக்கா 2012-ம் ஆண்டு முன் மொழிந்தது. ஆனால் பாதுகாப்பு அமைப்புகளின் ஆட்சேபணைகளினால் இந்த முயற்சி கைகூடாமல் போனது.
குறிப்பாக இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பும், ஐபி உளவு அமைப்பும், பயங்கரவாதிகள் தரவுப்பெட்டகத்தை அமெரிக்காவிடம் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.