எனது மகன் கண்ணய்யா குமாருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தாயார் மீனா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரது நாக்கை அறுத்தால் ரூ.4 லட்சம், தலையை கொண்டு வந்தால் ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லியின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
கண்ணய்யா குமாரின் தலைக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆதர்ஷ் குமார் என்பவரை டெல்லி போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். எனினும் கண்ணய்யா குமாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டி ருக்கின்றன.
இதுதொடர்பாக அவரது தாயார் மீனா தேவி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இந்துத்துவா அமைப்புகள் எனது மகனை கொலை செய்துவிடுவதாக மிரட்டல்கள் விடுத்து வருகின்றன. இதனால் பதற்றமாக இருக்கிறது.நீதிமன்ற வளாகத்திலேயே எனது மகனை தாக்கினார்கள். அங்கேயே பாதுகாப்பு இல்லை என்றால் எனது மகனின் நிலை என்ன?
கண்ணய்யா குமார் ஜாமீனில் விடுதலையானதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது அவனது பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறேன். அவன் எனக்கு மட்டும் மகன் இல்லை. இந்த நாட்டின் மகன். அவனுக்கு தேவையான பாதுகாப்பு ஏற் பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்