உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் உ.பி.யின் பரேலி நகருக்கு வந்த நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட்ப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேர்மையானவர். அவருக்கு டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி பொய்யான தகவலை பரப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் அந்தக் கட்சியினர் நாடகமாடுகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போடுகிறது. பண்ணையார் மனப்பான்மை கொண்ட அக்கட்சி, நாட்டின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. ஊழலின் தாயாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.