ஆந்திர அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், சீமாந்திராவில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா, கடலோர மாவட்டங்கள் ஆகிய இரு பகுதிகளிலும் அரசு ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 12-ல் இருந்து வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாம் முதல்வராக இருக்கும்வரை, ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று அவர் உறுதி அளித்தும், அதை அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆந்திர மாநிலத் தலைமைச் செயலகத்தில் மூன்று மணி நேரத்துக்கு நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிவடைந்தது.
இது தொடர்பாக, அரசு ஊழியர்களின் சங்கத்தின் பிரதிநிதி முரளி கிருஷ்ணா கூறும்போது, “மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு காலவரையற்ற வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆந்திரத்தைப் பிரிக்க விடமாட்டேன் என்று உறுதியளித்தார். ஆனால், மாநிலப் பிரிவினைத் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதியை அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று அவரிடம் சொல்லிவிட்டோம்.
புயல் எச்சரிக்கை இருப்பதால், அவசரகால நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பதை மனதில்கொண்டு, போராட்டத்தைக் கைவிடுமாறு ஆந்திர முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தகைய சூழல் வரும்போது, பஞ்சாயத்து ராஜ், வருவாய் உள்ளிட்ட துறைகளின் பணிகளில் பாதிப்பு வராதபடி தாங்கள் பார்த்துக்கொள்வதாக அரசு ஊழியர்கள் சங்கம் உறுதியளித்தது.
மேலும், தங்களின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு, டெல்லியில் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆந்திர முதல்வரிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சீமாந்திராவில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்வதால், அரசு அலுவல்கள் மிக மோசமாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் ஹைதராபாதில் மின் உற்பத்தியும் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.