நரேந்திர மோடியின் பேரணிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக, பிகார் மாநில அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
ஷிண்டே கூறியதாவது: வழக்கமாக எந்த ஒரு மாநிலத்தில் பேரணி நடைபெற்றாலும், அது குறித்து சம்பந்தப்பட்ட அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடும். இதனால், அந்த மாநில போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும்.சில நேரங்களில், தாக்குதல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு தகவலையும் மாநில அரசுக்கு அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் பிகார் அரசுக்கு அனுப்பிய முன் அறிவிப்பில்: உங்கள் மாநிலத்தில் பேரணி நடைபெறவிருக்கிறது. இந்தப் பேரணியில் தீவிராத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. 2 அல்லது 3 நாட்களுக்குள் தாக்குதல் நடத்தப்படலாம், என்ற தகவலை உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது என்றார்.
'பாதுகாப்பு போதுமானதே'
பாட்னா குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா என்று புது தில்லியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாகவே உள்ளது. அதனை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நரேந்திர மோடியின் பிரச்சார பேரணியை குறி வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.