இந்தியா

சிபிஐ கருத்தரங்கில் ராகுல் திராவிட் விளையாட்டுத் துறை ஊழல் குறித்து பேசுகிறார்

செய்திப்பிரிவு

கிரிக்கெட்டில் சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், விளையாட்டுத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கிரிக்கெட் நட்சத்திரம் ராகுல் திராவிட் கலந்து கொண்டு தனது கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

சிபிஐ சார்பில் "ஊழல் மற்றும் குற்றத்தை தடுப்பதற்கான வியூகம் வகுத்தல்" என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைக்கும் பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பான சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட உள்ளார். இந்த விழாவில், சிறப்பாக பணிபுரிவோருக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கத்தை 6 சிபிஐ அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்க உள்ளார். கிரிக்கெட் உலகில் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், "விளையாட்டுத் துறையில் ஒழுக்கக் கோட்பாடுகள் மற்றும் நேர்மை - சட்டத்தின் தேவை மற்றும் சிபிஐ-யின் பங்கு" என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், விளையாட்டு பாதுகாப்புக்கான சர்வதேச மையத்தின் இயக்குநர் கிறிஸ் ஈட்டன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ரவி சவானி உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனர்.

இதுகுறித்து, சிபிஐ செய்தித் தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் கூறுகையில், "இந்தியாவில் விளையாட்டுத் துறையில் ஊழல் நிலவுவதற்கான காரணம் மற்றும் அதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம். மேலும், விளையாட்டுத் துறையில் ஊழலைத் தடுப்பது தொடர்பாக சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதா என்பது குறித்தும் ஆராயப்படும்" என்றார்.

இந்தக் கருத்தரங்கில் 20 நாடுகளைச் சேர்ந்த ஊழல் தடுப்புத் துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இவர்கள், ஊழலின் இயற்கை வள மேலாண்மை மற்றும் அதன் பரப்பு, ஆள்கடத்தல், குற்றங்கள் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற உள்ள தொடக்க விழாவில், மத்திய சட்டம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு மாநாட்டின் மையக் கருத்து குறித்து பேச உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், மத்திய அமைச்சரி வி. நாராயணசாமி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

- பி.டி.ஐ.

SCROLL FOR NEXT