எலும்பு முறிந்த வலது காலை விடுத்து இடது காலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதில், இரும்பு தண்டையும் வைத்துள்ளனர். அதிர்ச்சிக்குரிய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியின் பிரபல தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு டெல்லி மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியின் அசோக் விஹார் பகுதியை சேர்ந்தவர் ரவி ராய் (24). இவர் தனது வீட்டு மாடிப்படியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தவறுதலாக விழுந்து விட்டார். இதனால் ரவியின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் சிகிச்சைக்காக அருகில் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென் றுள்ளனர். அங்கிருந்த எலும்பு மருத்துவ நிபுணர்கள் ரவியின் வலதுகாலை பரிசோதித்தபின் அதில் இரும்புத் தண்டை பொருத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து திங்கள்கிழமை நடந்த அறுவை சிகிச்சையின் போது, வலது காலுக்கு பதிலாக தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து இரும்புத் தண்டை பொருத்தி விட்டனர். இந்தச் செய்தி வெளியாகி டெல்லிவாசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த தவறின் மீது டெல்லி மருத்துவ கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மருத்துவ கவுன்சில் பதிவாளர் டாக்டர் கிரிஷ் தியாகி கூறும்போது, “நடந்த தவறுக்கு விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளோம். எங்கள் கவுன்சில் மருத்துவக் குழு அந்த மருத்துவ மனைக்கு நேரில் சென்று விசா ரணை நடத்தவுள்ளது. அப்போது, பாதிக்கப்பட்ட நபருக்கு மேற் கொள்ளப்பட்ட பரிசோதனை உட் பட அனைத்து மருத்துவ அறிக்கை களையும் எங்கள் குழுவின் பார் வைக்கு வைக்குமாறு கோரியுள் ளோம். முழு விசாரணைக்கு பின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
மருத்துவமனை விளக்கம்
இதற்கிடையே, அந்த அறுவை சிகிச்சை அறையின் மருத்துவர், செவிலியர், உதவியாளர் என குழு வினர் அனைவரையும் நிர்வாகம் மறுநாளே பணி நீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக விளக்க அறிக்கையும் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் மருத்துவமனை சார்பில் உடனடி யாக விசாரணைக் குழு அமைக் கப்பட்டது. அதன் முதல் கட்ட அறிக்கையில் அறுவை சிகிச்சைக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சில முறைகளில் தவறு நடந்துள்ளது தெரியவந்தது. எங்களிடம் சிகிச்சைக்கு வருவோ ரின் நலனுக்கு அதிக முக்கியத் துவம் தரப்படுகிறது” என்று கூறப் பட்டுள்ளது. தற்போது ரவி, மற்றொரு தனியார் மருத்துவ மனையில் முறையான சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லியில் அரசு மற்றும் பிரபல தனியார் மருத்துவமனை களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது இது முதன் முறையல்ல. இவற்றில் பாதிக்கப் பட்ட அனைவரும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் செய்வது இல்லை. எனினும் டெல்லி மருத்துவ கவுன்சிலில் இந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி வரை 143 புகார்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன. கடந்த ஆண்டு 253 புகார்கள் மருத்துவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி மருத்துவ கவுன்சிலுக்கு வரும் புகார்களை, இதன் மருத்து வர் குழு நேரில் சென்று விசாரணை நடத்துகிறது. இதில் தவறுகள் உறுதி செய்யப்படும்போது, அதற் கான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. டெல்லியில் போதுமான வசதிகள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீதும் கவுன்சிலிடம் புகார் வருகின்றன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுக்கு கவுன்சில் பரிந்துரைத்து வருகிறது.