இந்தியா

டெல்லி மாணவி வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

டெல்லி மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில், குற்றவாளிகளில் ஒருவர் சிறார் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று ஓடும் பேருந்தில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான ராமன்சிங் திஹார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால், அவரது வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மற்ற 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்நிலையில், 17 வயது நிரம்பிய குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மட்டும் தண்டனை வழங்கியுள்ளது. அந்த நபர் சிறுவன் தானா என்பதை குற்றவியல் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டுமே தவிர சிறார் நீதிமன்றம் முடிவு செய்யக் கூடாது என, மாணவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் 4 வார காலத்திற்குள் விளக்கமளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT