காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வரும் 8-ம் தேதி வரை முழுஅடைப்பு போராட்டத்தை நீட்டித்து அறிவித்துள்ளதால், நேற்று மூன்று இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நகரில் உள்ள நவெட்டா, எம்.ஆர்.கஞ்ச் காவல் நிலைய பகுதிகளிலும், பாரமுல்லாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது” என தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி புர்ஹான் வானி காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து 55 நாட்களாக பதற்றம் நிலவுகிறது. கடந்த மூன்று நாட்களாக காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத் பகுதியில் வன்முறைக் கும்பல் ராணுவ வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் டேனிஷ் அகமது (18) என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
குல்காம் மாவட்டம் சவல்காம் கிராமத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி மாநிலங்களவை எம்.பி. நாசர் அகமதுவின் வீட்டை வன்முறைக் கும்பல் தீ வைத்துக் கொளுத்தியது.
நேற்று, சோபூர் பகுதியில் கல்வீச்சு சம்பவங்களும், நகரில் மூன்று சக்கர வாகனம் ஒன்று கொளுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பாரமுல்லா மாவட்டத்தில் 2 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிட மிருந்து ஏகே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் கைபற்றப்பட்டுள்ளன.