இந்தியா

காஷ்மீரில் அமைதி திரும்ப மாணவர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

செய்திப்பிரிவு

“காஷ்மீரில் அமைதி திரும்ப மாணவர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்த வேண்டும். அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

“ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் ‘பெல்லட்’ குண்டு பாய்ந்து பலர் காயம் அடைவதும் உயிரிழப் பதும் வழக்கமாக உள்ளதால் பெல்லட் குண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரி ‘ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன்’ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்களிடம் நீதிபதிகள் கூறும்போது, “பெல்லட் குண்டு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றால் வருங்காலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறாது என நீங்கள் உறுதி அளிக்க வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்ப மாணவர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்த வேண்டும். அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்.

காஷ்மீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் (பிரிவினை வாதிகள்) மற்றும் மக்கள் செல் வாக்கு பெற்றவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட நீதிமன்றம் தயாராக உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினரை இணங்கச் செய்து வன்முறை யில் இருந்து விலகியிருப்போம் என்று பார் அசோசியேஷன் உறுதிமொழி பெற்றுத்தரவேண்டும். அவ்வாறு பெற்றுத்தந்தால் காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியாக 15 நாட்களுக்கு பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொள்ளும்.

கல்வீச்சு, வன்முறைப் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினை களுக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் பார் அசோசியேஷன் கலந்துபேசி பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தாங்கள் பிரதிநிதி அல்ல என்று விலகி ஓடக்கூடாது” என்று தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறும்போது, “காஷ்மீர் பிரச்சினைக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு பேசத் தயாராக உள்ளது. ஆனால் பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்த முடியாது” என்றார்.

பிரிவினைவாதிகள் புறக்கணிக் கப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பார் அசோசியேஷனின் சில கருத்துகளுக்கு அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த வழக்கு மே 9-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT