இந்தியா

மானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்: ஒரே சாட்சியான ஓட்டுநர் மீண்டும் திட்டவட்டம்

பிடிஐ

1998 மான் வேட்டை தொடர்பான 2 வழக்குகளில் நடிகர் சல்மான் கானை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், “தலைமறைவானார்” என்று கூறப்பட்ட அவரது அப்போதைய ஜீப் டிரைவர், மானை சல்மான் கான் சுட்டு வீழ்த்தினார் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜீப் டிரைவர் ஹரிஷ் துலானி கூறியதாவது:

18 ஆண்டுகளுக்கு முன்பாக மேஜிஸ்ட்ரேட்டிடம் என்ன கூறினேனோ அதில் நான் மாறப்போவதில்லை. சல்மான் அன்று காரிலிருந்து இறங்கி மானை சுட்டு வீழ்த்தினார். நான் தலைமறைவாகவில்லை, எனக்கும் என் தந்தைக்கும் கடும் மிரட்டல்கள் வந்தன.

இதனால் அச்சத்தில் ஜோத்பூரில் உள்ள எனது உறவினர் வீட்டுக்குச் சென்றேன். நாங்கள் பாதுகாப்பு கேட்டோம், ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை. போலீஸ் பாதுகாப்பு எனக்கிருந்திருந்தால் நான் வாக்குமூலம் அளித்திருப்பேன். அப்படிச் செய்யத்தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்.

என்று கூறினார்.

சிங்கரா மானின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பெல்லட்கள் சல்மான் கானின் உரிமம் பெற்ற துப்பாகியிலிருந்து வெளிவந்ததல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பின் ஒரே சாட்சியான டிரைவர் ஹரிஷ் துலானி 2002 முதல் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் அரசுதரப்பு பலவீனமடைந்தது.

இந்நிலையில் டிரைவர் கூறும்போது, சல்மான் டிரைவராக இருந்ததற்கு நல்ல தண்டனை கிடைத்தது என்று கூறியுள்ளார். “நான் என் வாழ்க்கையை அச்சத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT