இந்தியா

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பற்றி சர்ச்சை கருத்து: அமைச்சர் பாரிக்கருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

செய்திப்பிரிவு

இந்தி நடிகர் ஆமிர் கான் பற்றி மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் பிரச்சினை எழுப்பியதால் சிறிது நேரம் அமளி நிலவியது.

மாநிலங்களவையில், பூஜ்ஜிய நேரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரயன் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் பேசும் போது, “நாட்டில் மத அடிப்படை வாதம் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள் ளிட்டோர் மத உணர்வைத் தூண்டும் வகையில் தினமும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசும் போது, “ஆமிர் கானின் முந்தைய பேச்சு பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பாரிக்கர், ‘இதுபோன்று பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அப்படியானால் சிறுபான்மையினருக்கு என்ன பாடம் கற்பிக்கப் போகிறார் என்று நாட்டு மக்களுக்கு அமைச்சர் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பாரிக்கர் பேசும்போது, “உறுப்பினர்கள் அனைவரும் நான் பேசிய வீடியோ பதிவைப் பார்க்க வேண்டும். நான் பேசியதாக ஊடகங்களில் வெளியாகி இருப்பது போல நான் பேசவில்லை. யாருடைய பெயரையும் நான் குறிப் பிடவும் இல்லை, மிரட்டல் விடுக்க வும் இல்லை” என்றார். ஆனாலும் இவரது இந்த பதிலால் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை.

அமளிக்கு நடுவே, ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி), மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட் டோரும் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அவையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது அவர் கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து விவா திக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும். அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அதுபற்றி விவாதிக்க விதிமுறைகள் உள்ளன. அதைக் கடைபிடிக்க வேண்டும்” என்றார். இதன் காரணமாக அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் அவை சுமூகமாக நடைபெற்றது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். மேலும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் இந்தியாவை விட்டு வெளியேற தனது மனைவி விரும்புவதாக நடிகர் ஆமிர் கான் கூறியிருந்தார். சமீபத்தில் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பாரிக்கர், நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையாகி உள்ளது.

SCROLL FOR NEXT