இந்தியா

முதுமையை எட்டும் இந்தியா: 2050-ல் ஐந்தில் ஒருவருக்கு 60 வயதிருக்கும் என அறிக்கையில் தகவல்

பிடிஐ

இந்தியாவில், 2050-ம் ஆண்டு, ஐந்தில் ஒருவருக்கு 60 வயதிருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது 12-ல் ஒருவருக்கு 60 வயதுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) மற்றும் க்ரிஸில் அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் தேசம் என சொல்லப்படும் இந்தியாவுக்கு கூடிய விரைவில் அந்த பெருமையிலிருந்து 'கட்டாய ஓய்வு' கிடைக்கும் எனத் தெரிகிறது. பிஎஃப்ஆர்டிஏ மற்றும் க்ரிஸில் அமைப்புகள், இந்தியாவில் முதியவர்களுக்கு இருக்கும் நிதி சார்ந்த பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் தற்போது 8.9 சதவீதம் இருக்கும் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை, 2050-ம் ஆண்டு 19.4 சதவீதமாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் 80 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 0.9 சதவீதத்திலிருந்து, 2050-ம் ஆண்டு, 2.8 சதவீதமாக அதிகரிக்கும். குடும்பங்களுக்குள் நிலவும் தலைமுறைகளுக்கு இடையேயான ஆதரவு குறைந்து வருவதால், மேம்படுத்தப்பட்ட, சுயமாக நீடிக்கும் ஒரு ஓய்வூதியத் திட்டம் அவசியம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015-ல், கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் 60 வயதுக்குக் கீழ் இருந்தார்கள். வேலைத்திறன் நபர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 44 சதவீதம் இருந்தது.

இது குறித்து பேசிய பிஎஃப்ஆர்டிஏ தலைவர் ஹேமந்த், "ஓய்வூதியத்துக்கென தனியாக மேம்படுத்தப்பட்ட ஒரு துறை இருந்தால் அரசு கஜானாவில் நிதிச் சுமை குறைவதோடு, நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் ஒரு நிலையான தன்மையை உருவாக்கும்.

தனிப்பட்ட நிதி நிர்வாகம், ஓய்வு கால திட்டம் ஆகியவை பற்றி பாடத்திட்டத்தில் இருந்தால், அது நிதி பற்றிய கல்வியறிவுக்கான நமது நோக்கத்தை நிறைவேற்ற உதவும்" என்றார்.

இந்தியாவில் அரசு ஓய்வூதிய திட்டமான அடல் பென்ஷன் யோஜ்னாவில் 47 லட்சம் பேர் மட்டுமே இருக்கிறார்கள், 49 சதவிதம் பேர் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். 37 சதவீதம் பேர் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் திட்டத்தில் இணைந்துள்ளனர். கேட்பதற்கு குறைந்த தவணை போல தெரிந்தாலும், இது போன்ற சேமிப்பைக் கூட பெரும்பான்மை மக்களால் தொடர முடியவில்லை என்பது தெரிகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்பு நிதி (44 சதவிதம்) மற்றும் வருங்கால வைப்பு நிதி (14 சதவிதம்) ஆகிய திட்டங்கள் மட்டுமே அதிக மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சேமிப்பு, முதலீடுகளில் தனிநபர் பங்களிப்பு என்பது இன்னும் அதிக மக்களிடம் சென்று சேரவில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT