இந்தியா

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி: பெங்களூருவில் மீண்டும் மழை - மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்

இரா.வினோத்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர், ஏமலூர், மடிவாளா, பன்னார்கட்டா ஏரிகள் நிரம்பியுள்ளன. இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகலிலும் இடைவிடாது மழை கொட்டித் தீர்ப்பதால் ஆங்காங்கே தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன.

நேற்று முன்தினம் பெய்த தொடர்மழையால் கெங்கேரி, பசவன்குடி, பன்னார்கட்டா, ஹூளிமாவு, பாபுஜிநகர், பிலேகாஹள்ளி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. கோடி சிக்கனஹள்ளி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் வாகனங்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து மீட்புக் குழுவினர் படகு மூலம், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பால், உணவுப் பொருள் ஆகியவற்றையும் வழங்கி வருகின்றனர்.

சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பெங்களூருவில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பன்னார்கட்டா சாலை, எலெக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாப்பூர் சாலை, ஓசூர் சாலை, ஆகியவற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேங்கியுள்ள நீரை பம்புகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் மக்கள் கடும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT