ஆந்திர மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதி சத்யநாராயணா நேற்று விஜயவாடாவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
வருடாந்திர விற்பனையின்படி மார்ஜின் கமிஷனை டீலர்களுக்கு பெட்ரோல் நிறுவனங்கள் வழங்க வேண்டும். இது குறித்து அபூர்வா சந்திரா கமிட்டி சிபாரிசு செய்தும் எண்ணெய் நிறுவனங்கள் வழங்க மறுத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் மே 10-ம் தேதி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அதன்படி, அன்று பெட்ரோல், டீசலை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாங்க மாட்டோம்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெட்ரோல், டீசல் சேமிப்பை வலியுறுத்தும் வகையில், மே 14-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுகிறது. மேலும், மறுநாள் மே 15-ம் தேதி முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஒரே ஒரு ஷிப்ட் பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டிய மார்ஜின் கமிஷனை கொடுக்க ஒப்புக்கொண்டால் ஞாயிறு தவிர்த்து, மற்ற நாட்களில் 24 மணி நேரமும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
ஏற்கெனவே தமிழகம் மற்றும் புதுவையில் வரும் மே 14-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை இயக்க மாட்டோம் என பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.