இந்தியா

மோடிக்கு விளாசல் மற்ற கட்சிகளிடம் மௌனம்!

செய்திப்பிரிவு

உபியின் உன்னாவை சேர்ந்த சாதுவான ஷோபன் சர்க்கார், மோடியை கண்டித்து விட்டு மற்ற கட்சி தலைவர்கள் கருத்துக்கு சாதிக்கும் மவுனத்தால், சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சி பிரசார மேடையில் உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் தங்கப் புதையல் வேட்டை பற்றி குறிப்பிட்டு பேசினார் நரேந்திர மோடி. அப்போது, ’ஒரு சாதுவின் கனவைக் கேட்டு அகழ்வராய்ச்சி செய்யும் அரசு, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை திரும்ப கொண்டு வரலாமே?’ எனக் கேட்டிருந்தார்.

இதில், மோடி தம்மை கிண்டலடிப்பதாக எண்ணி, கோபமான சாது, ஒரு திறந்த கடிதம் ஒன்றை மோடிக்கு எழுதினார். அந்தக் கடிதத்தின் நகலை, தன் முக்கிய சீடரான ஓம்ஜி மூலம் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பினார். அதில் மோடியின் பிரசார மேடைகளுக்காக பாஜக செய்து வரும் செலவு பணம் கறுப்பா - வெள்ளையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

சர்க்காரை மதிக்கிறேன் - மோடி

இந்த மோதலை தவிர்க்க எண்ணிய மோடி, சாதுவை மிகவும் மதிப்பதாக தனது டிவிட்டர் கணக்கில் திங்கள்கிழமை எழுதியுள்ளார். ‘லட்சக்கணக்கானவர்கள் சாது ஷோபன் சர்க்கார் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனக்கும் அவர் மீது மதிப்பு உண்டு.’ வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம் மீது மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் சர்ச்சை!

மோடியை விட அதிகமாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய உணவுத்துறை அமைச்சருமான சரத் பவார், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் சாதுவின் கனவை கண்டித்து கருத்து கூறியிருந்தனர். எனினும், மோடியை மட்டுமே சாது கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸுடன் சாது நெருக்கம்!

சாதுவிவ் சிஷ்யர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மாமனாரான கோபிநாத் தீக்ஷித் சாதுவின் முதல் சிஷ்யர். இவர், உபியில் காங்கிரஸ் முதல்வராக என்.டி. திவாரியின் கீழ் உள்துறை அமைச்சராக இருந்தார். இவரது சொந்த ஊர் உன்னாவ். இதே ஊரை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லாவின் குடும்பம் சாதுவின் ஆஸ்ரமம் சென்று வருகிறது. இப்போது அகழ்வராய்ச்சியின் பெயரில் தங்கப்புதையல் வேட்டை ஆரம்பித்து வைத்த மத்திய இணை அமைச்சர் சரண்தாஸ் மஹந்தும் ஒரு காங்கிரஸ்காரர்தான்.

தேடுவது தங்கம்! கிடைத்தது சுவர்!

இதற்கிடையே, உ.பி.யின் உன்னாவில் சிதிலமடைந்த கோட்டையில் நான்காவது நாளாக தங்கப் புதையல் வேட்டை தொடர்ந்தது. சுமார் 100 செ.மீ. ஆழத்தில் கெட்டியாக ஏதோ தட்டுப்பட, கடைசியில் அது கோட்டைச் சுவர் என்று தெரிய வந்தது.

பதேபூரிலும் தங்க வேட்டை

உன்னாவ் மாவட்டம் பதேபூர் அருகேயுள்ள ஆதம்பூரிலும் 2500 டன் எடையுள்ள தங்கம் கிடைப்பதாக சாது கனவு கண்டிருக்கிறார். அங்கும் அரசு அகழ்வாய்வை தொடங்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

SCROLL FOR NEXT