டெல்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று பதவியேற்கிறார். அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார்.
பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்துக்கு மெட்ரோ ரயிலில் வரவுள்ளதாக தனது கட்சி அலுவலகத்துக்கு வெளியே நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி கொடுக்கும்போது கேஜ்ரிவால் கூறினார்.
பதவியேற்கும் அமைச்சர்களையும் மெட்ரோ ரயிலில் வரும்படி அறிவுறுத்தியுள்ளார். நிகழ்ச்சிக்கு வரும்படி பொதுமக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கேஜ்ரிவாலுடன் அமைச்சர்களாக மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி உள்ளிட்ட 6 பேர் பதவியேற்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைகிறது. பதவியேற்ற உடனேயே அமைச்சரவைக் கூட்டம் நடத்தவுள்ள கேஜ்ரிவால், முக்கிய சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
அரசியலை தூய்மைப்படுத்துவது என்கிற லட்சியத்துடன் தேர்தலில் இறங்கிய கேஜ்ரிவால், அதிகார பீடத்துக்கு 45 வயதிலேயே வந்து சாதனை படைக்கிறார். சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தொடங்கிய ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் தன்னை ஆரம்பத்தில் இணைத்துக் கொண்ட கேஜ்ரிவால், இடையில் அதிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியை (சாமானியர்கள் கட்சி) ஒரு ஆண்டுக்கு முன் தொடங்கினார்.
இந்திய வருவாய்ப் பணியில் அரசுப் பதவி வகித்த கேஜ்ரிவால் ஊழல் ஒழிப்பில் அக்கறை காட்டி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தி பிரபலம் ஆனவர். மகசேசே விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
அவர் உடனடியாக எதிர்கொள்ளவேண்டிய சவால்கள், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும். டெல்லி ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது, டெல்லி நகரில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றுக்கும் இலவசமாக 700 லிட்டர் குடிநீர் விநியோகிப்பது ஆகியவை அவரது வாக்குறுதிகளில் சில.பதவிக்கு வந்த 15 நாளில் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது இந்த கட்சியின் முக்கிய வாக்குறுதி. டெல்லி அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், முதல்வர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஜன லோக்பால் வரம்பில் வருவார்கள்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கேஜ்ரிவால் கட்சி, முந்தைய ஷீலா தீட்சித் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவால் என்ன செய்யப்போகிறார் என்பது அனைவராலும் உற்று நோக்கப்படும் விஷயமாக இருக்கிறது.
காங்கிரஸ், பாஜக தயவில் ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என முதலில் தயக்கம் காட்டினார் கேஜ்ரிவால். பொறுப்பை தட்டிக்கழிப்பதாக இரு கட்சிகளும் குற்றம் சாட்டவே ஆட்சி அமைக்க முன்வந்து துணை நிலை ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து உரிமை கோரினார்.
கேஜ்ரிவால் அரசில் எல்லோருமே இளைஞர்கள்தான். முதல்வர் உள்பட கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே புது முகங்கள். பெண் எம்.எல்.ஏ ராக்கி பிர்லா (26) அமைச்சர்களில் இளையவர். ஒரே பெண் அமைச்சரும் இவர்தான்.
துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்ட ஆம் ஆத்மி 70 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவையில் 28 இடங்களை வென்றது. பாஜக 31, காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது.
ஹசாரேவுக்கு அழைப்பு
பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அண்ணா ஹசாரேவுக்கு வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார் கேஜ்ரிவால். தொலைபேசியில் தொடர்புகொண்டு கேஜ்ரிவால் அழைத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவர் வருவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
துணை நிலை ஆளுநர் அலுவலகமும் அண்ணா ஹசாரேவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை அனுப்பியுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.