மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்படும் தமிழக இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்குளம் என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதை பொதுமக்கள் கண்டனர். அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே, அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் என்றும் கணிதத்தில் பட்டமும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பாடத்தில் பட்டயமும் பெற்றவர் எனத் தெரியவந்தது.
அவரிடமிருந்து மாவோயிஸ்ட் தொடர்புடைய பிரசுரங்கள் மற்றும் மருந்துகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.