இந்தியா

தமிழகத்தில் குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது: கேரள முதல்வரிடம் பிரதமர் மோடி திட்டவட்ட பதில்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் சீனாவின் சார்பில் துறைமுகங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக கேரளாவில் விழிஞம், தமிழகத்தில் குளச்சல் ஆகிய பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.

கேரள தலைநகர் திருவனந்த புரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள விழிஞத்தில் ரூ.6595 கோடியில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் இந்த துறைமுக திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் குவாதர் பகுதி யில் சீன அரசு சார்பில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இணையாக விழிஞம் துறை முகத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2018-ம் ஆண்டுக்குள் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில்விழிஞம் துறைமுகத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் குளச்சல் துறைமுகம் அமைக்கப்படுவதால் கேரளாவின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அந்த மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருவனந்த புரத்தில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் இப்பிரச்சினை குறித்து பிரதமரிடம் முறையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது குளச்சல் துறைமுகத்தை கைவிடக் கோரி மனு அளிக்கப்பட்டது.

ஆனால் கேரளாவின் கோரிக் கையை பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார். அவர் கூறிய போது, நாட்டின் வளர்ச்சிக்கு இரண்டு துறைமுகங்களும் அவசியம். குளச்சல் துறைமுக திட்டத்தை ஒருபோதும் கைவிட முடியாது. இரு துறைமுகங்களும் அருகருகே இருப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இரண்டுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு வர்த்தகம் அதிகரிக்க உதவும். விழிஞம் துறைமுக திட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

பிரதமரை சந்தித்த பிறகு கேரள அமைச்சர் கடனபள்ளி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

குளச்சல் துறைமுகத்தால் விழிஞம் துறைமுகத்தின் வர்த்தகம் பாதிக்கும் என்று பிரதமரிடம் எடுத்துரைத்தோம். ஆனால் குளச்சல் துறைமுகத்தால் கேரளாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் உறுதியளித்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT