இந்தியா

பிரதமர் பதவியை கைப்பற்ற மக்களை தவறாக வழிநடத்தும் பாஜக: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு

செய்திப்பிரிவு

பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்ற ஒரே இலக்குடன் செயல்பட்டு வரும் பாஜக, அதற்காக மக்களை தவறாக வழிநடத்தி ஏமாற்றுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

ஹரியாணா மாநிலம், மேவாட் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி மேலும் பேசியதாவது: “இந்த தேர்தல் நாட்டின் வளர்ச்சி பற்றியது மட்டுமல்ல. நமது முன்னோர்களும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர். அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்டவற்றை பாதுகாப்பது தொடர்பாகவும்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. ஜாதி, மதம், மொழி பேதங்களற்ற மதச்சார்பற்றத் தன்மை கொண்ட நாட்டை உருவாக்க நாங்கள் போராடி வருகிறோம்.

பிரதமர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே குறிக் கோளுடன் பாஜக செயல் படுகிறது. அதற்காக மக்களை தவறாக வழிநடத்தி அக்கட்சி ஏமாற்றுகிறது. பாஜக தலைவர் கள், இப்போது தங்களின் பிரச்சார அணுகுமுறையை மாற்றி நீலிக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒருசிலரின் நலனுக்காக மட்டுமே என்றில்லாமல், அனைத்து தரப்பினரின் நலனுக்கும் காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். மேவாட் போன்ற பின்தங்கிய பகுதிகள் வளர்ச்சியடைந்திருப்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்” என்றார் சோனியா காந்தி.

ஏப்ரல் 2-ல் வேட்புமனு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இப்போது அவர் ரே பரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் சார்பில் ரே பரேலி தொகுதி பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்ட கட்சியினர் உடனிருப்பார்கள் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT