மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாத்துடன் கூட்டணி அமைப்பதா அல்லது நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைப்பதா என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று லோக்தளம் கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூனில் பாஜக வுடன் உறவை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா அல்லது ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதனிடையே தற்போது லாலுவிடம் இருந்து சற்று விலகி வரும் ராம்விலாஸ் பாஸ் வானுக்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் திடீர் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எங்கள் கட்சியைப் பொறுத்த வரை பிஹாரில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் நாங்கள் காங்கிரஸுடன் கைகோர்க்கவே விரும்புகிறோம்.
ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதா அல்லது ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதா என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும். பிஹாரில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வலிமை லோக் தளத்துக்கு உள்ளது.
தேர்தலுக்கு முன்பாக லாலு பிரசாத், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, இடதுசாரிகள், திமுக, அதிமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் கொண்டுவருவது கடினம். இதில் பெரும்பாலான கட்சிகள் நிச்சயமாக பாஜகவுடன் இணையமாட்டார்கள்.
எனவே தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அந்த மதச்சார்பற்ற கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கலாம் அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.