எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லையோர கிராம மக்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ராணுவ செய்திதொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ரவ்சேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். தானியங்கி ஆயுதங்கள், பீரங்கிக் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். காலை 7.15 மணி முதல் பாக். ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது" என்றார்.
முன்னதாக கடந்த 11-ம் தேதி நடந்த தாக்குதலில் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவரது கணவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இந்நிலையில், மீண்டும் இன்று எல்லையோர கிராமத்தை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை மூட உத்தரவு:
எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் ரஜோரி மாவட்டத்தில் நவுசேரா தாசில் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளை மூட சார் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள 1200 பேரையும் பத்திரமாக அப்புறப்படுத்தி வேறு இடங்களில் தங்கவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.