கிரிக்கெட் உலகை உலுக்கிய 2013 ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அன்கிட் மற்றும் பிற கிரிக்கெட் வீரர்கள், சூதாட்டத் தரகர்கள் சிக்கினர்.
இதில் ஸ்ரீசாந்த் சிக்கிய போது அவரது அறையிலிருந்து பணத்தையும் பொருட்களையும் போலீஸ் கண்களில் படாது அகற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவரது நண்பர் அபிஷேக் ஷுக்லா என்பவரை நினைவிருக்கலாம்.
அபிஷேக் ஷுக்லாவைக் கைது செய்த பிறகு அவரது வீடு, அவர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு ரூ.5.5 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இது டெல்லி போலீஸ் வசம் இருந்தது.
ஆனால் 2015-ல் அமர்வு நீதிமன்றம் அந்தக் குறிப்பிட்ட வழக்கின் கீழ் இவர்களை கொண்டு வர முடியாது என்று கூறி ஸ்ரீசாந்த் உட்பட அனைவரையும் விடுவித்தது. மேலும் போலீஸ் வழக்கு தொடர்ந்த பிரிவின் கீழ் ஸ்பாட் பிக்சிங் சட்ட விரோதம் என்பதற்கான இடமில்லாமல் போனதால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் நண்பர் அபிஷேக் ஷுக்லா தனது பணத்தைத் திருப்பித் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடைசியாக பிப்ரவரி 2-ம் தேதி 2017-ல் அபிஷேக் ஷுக்லாவிடம் ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை திருப்பி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த ரொக்கம் முழுதும் பிற்பாடு தடை செய்யப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளாக இருந்தது. இதனால் ரொக்கத்தை மீட்டும் பயனற்றதானது.
இவர் ரிசர்வ் வங்கியை அணுகிய போது மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கியும் கைவிரித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக் ஷுக்லா, தனது வழக்கறிஞர் மஞ்சித் அலுவாலியா மூலம் உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் பறிமுதல் செய்யப்பட்ட போது அளித்த மெமோவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. பிறகு இதில் என்ன உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதை கோர்ட் முடிவு செய்யவுள்ளது.
ஷுக்லாவுக்கு பணத்தை மாற்ற முடிந்தால், இது நோட்டை மாற்ற முடியாத பிறருக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும். போலீஸ் அதிகாரிகள் கூறும்போது இது போன்று நூற்றுக்கணக்கான வழக்குகளில் பணம் பழைய நோட்டுகளில் அப்படியே உள்ளது என்று கூறிய அதே வேளையில் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற உரிமை உள்ளவர்கள் என்று கூறினர்.