இந்தியா

பெங்களூரு உருக்கு மேம்பால திட்டம் கைவிடப்படுகிறது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுரையின் பேரில் கர்நாடக அரசு முடிவு

இரா.வினோத்

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு விரைவில் செல் வதற்காக பசவேஸ்வரா சதுக்கத் தில் இருந்து ஹெப்பாள் வரை உருக்கு மேம்பாலம் அமைக்கப் போவதாக கர்நாடக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. ரூ.2,100 கோடி செலவில் 6.7 கிமீ நீளத்துக்கு நான்கு வழி கொண்டதாக, இந்த உருக்கு மேம்பாலம் உருவாக் கப்படும் என திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தை எதிர்த்து பெங்க ளூரு குடிமக்கள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பெங்களூருவின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்த மேம்பாலத்துக்காக 800-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவ தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக் கப்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து, அவதிப்பட நேரிடும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, “உருக்கு மேம் பாலம் அமைப்பதில் பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பல கோடி ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் முதல்வர் சித்தராமையா வுக்கு பங்கு இருப்பதாலேயே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என க‌ர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டினார்.

உருக்கு மேம்பாலம் அமைப் பதற்கு பெங்களூரு குடிமக்கள் அமைப்பினரும் சுற்றுச்சூழல் ஆர் வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங் களில் கையெழுத்து இயக்கம் நடத் தினர். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, இந்த திட்டத்தைக் கைவிட உத்தர விடுமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த திட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் ஆகி யோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, “அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி, உருக்கு மேம்பால திட்டத்தை நிறைவேற்றினால் நமது கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகளும் ஊழல் புகாரை கிளப்பியுள்ளதால், மக்களுக்கு தேவையற்ற சந்தேகம் ஏற்படும். எனவே, உருக்கு மேம்பால திட்டத்தை கைவிட வேண்டும்” என்று ராகுல் அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து முதல்வர் சித்தராமையா அமைச்சரவையை கூட்டி, இந்த திட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் நேற்று கூறும்போது, “பெங்களூரு உருக்கு மேம்பால திட்டத்தை கைவிடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கூறிய எடியூரப்பா மீது வழக்கு தொடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன்” என தெரிவித்தார்.

இதனால் பெங்களூரு குடிமக் கள் அமைப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

SCROLL FOR NEXT