நீண்ட தூரத்தில் இருக்கும் கிணறுகள், குளங்கள், குட்டைகள், அரிதாக வரும் வாட்டர் டேங்கர்கள் இவைதான் ஆந்திராவின் சில மாவட்டங்களில் வறட்சியை எதிர்கொள்ளும் மக்கள் கூட்டத்தின் நம்பிக்கையாகும்.
எரியும் நெருப்பாய் தகிக்கும் வெப்பத்தில் இவையும் சில வேளைகளில் கைகொடுக்காமல் போவதுண்டு. இயல்பு வாழ்க்கையை தொடர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மர்காப்பூர் தொகுதியில் ப்ளோரைடு பாதிக்கப்பட்ட பஞ்சகாயல்பல்லி கிராமத்தினர் தங்களின் பிழைப்பையும் விடுத்து அரிதாக வரும் தண்ணீர் லாரிகளுக்காக பாதி நாட்கள் காத்துக் கிடக்கும் கதை தொடர்கிறது.
இந்நிலையில் தண்ணீர் லாரிக்கு பதிலாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் குழு அங்கு சென்றது மக்களின் முகத்தில் பெரும் ஏமாற்றத்தைக் காட்டியது.
வயக்காட்டிலிருந்து 700-800 அடியிலிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரையே லாரிகள் கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆந்திராவின் மேற்குப் பகுதிகளில் இதுதான் நிலவரம். பிரகாசம் மாவட்டம் 3-வது தொடர்ச்சியான வறண்ட ஆண்டைச் சந்தித்து வருகிறது.
சுமார் 56 மண்டலங்களில் உள்ள இந்த மாவட்டத்தின் 1000 குடும்பங்களுக்கு மேற்பட்டவை புளோரைடு பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை நம்பியே காலத்தை ஓட்டி வருகின்றனர்.
நிலவரம் பற்றிய இருண்ட ஒரு சித்திரத்தை அளித்த கிராம சர்பாஞ்ச் எம். மல்லா ரெட்டி, “சுன்கேசுலசெருவுக்கு தண்ணீர் வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. குடிநீர்த்த் தேவைகளுக்கான இரண்டு போர்வெல்கலும் வறண்டு விட்டது. இதுதான் பல வேளாண் போர்வெல் நிலவரமும். வீடு ஒன்றுக்கு 3 அல்லது 4 குடம் தண்ணீர்தான் எங்களால் அளிக்க முடிகிறது”, என்றார்.
தண்ணீருக்கான எங்கள் அனைத்துத் தேவைகளையும், அதாவது சமையலுக்கு, துணி துவைப்பதற்கு, கால்நடைகளின் தாகத்தைப் போக்குவதற்கு என்று தண்ணீருக்கு எங்கே போவது? விவசாயம் முற்றிலும் அழிந்த நிலையில் எங்களது குறைந்த வருவாயில் தண்ணீருக்கு எப்படி செலவழிக்க முடியும்? என்று கேட்கிறார் சாரதா என்கிற பெண்மணி.
தனது தினசரி வயிற்றுப்பாட்டுக்கான வேலையை விடுத்து தண்ணீர் லாரி எங்கு வருகிறதோ அங்கு செல்லும் கிராமமக்களுடன் இவரும் கலந்து கொள்ள வேண்டிய நிலை. எல்லாம் ஒரு குடம் தண்ணீருக்காக.
தோனகொண்டா மக்களுக்கோ ஒரு குடம் கிருஷ்ணா நதி நீருக்காக 45 நிமிடம் ரயிலில் செல்ல வேண்டிய நிர்பந்தம். ஏனெனில் கிராம சேமிப்பு டேங்க் கோடைக்காலத்தில் பெரும்பாலும் வறண்டு விடும்.
“இந்த ஆண்டு மார்ச் வரை கிருஷ்ணா நதி நீர் கிடைத்ததே அதிர்ஷ்டம். இப்போது ரயிலில் சென்று கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வருகிறோம்” என்கிறார் ராமகிருஷ்ண ரெட்டி என்ற கிராமவாசி.
குளிப்பது என்பதே ஆடம்பரம் என்கிறார் ஜம்மனப்பல்லி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசுலு. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் தண்ணீரில்லாததால் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது.
தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலிகொன்டா திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் 15.25 லட்சம் மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டமாகும். மேலும் 4.50 லட்சம் ஏக்கர்கள் வேளாண் நிலங்கள் பயனடையும். இந்தத் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதை நம்பித்தான் இப்பகுதி மாவட்டத்தினர் காலத்தை ஓட்டி வருகின்றனர்.