இந்தியா

தூக்கு தண்டனை ரத்து: வரலாற்று முக்கியத்துவ தீர்ப்பு- ஹென்றி டிபேன் கருத்து

குள.சண்முகசுந்தரம்

வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆதரவாக மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு தொடர்ந்து சட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், “வீரப்பன் கூட்டாளிகள் 117 பேரில் 108 பேரைத் தடா நீதிமன்றம் விடுதலை செய்தது. எஞ்சிய 9 பேரில் நான்கு பேருக்கு சாதாரண தண்டனை அளிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கிட்டு விடுக்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய் தோம். ஐந்து பேரில் ஒருவரை மட்டும் விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், மற்ற நால்வருக்கும் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. மாநில அரசின் எந்த வேண்டுகோளும் இல்லாமலேயே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

இதையடுத்து, அந்த நால்வரும் 2004-ல் ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டார்கள். அந்த மனுவை ஒன்பது ஆண்டுகள் கழித்து நிராகரித்தார் ஜனாதிபதி. கருணை மனுவை இப்படி காலம் கடத்தியது தவறு என்று சொல்லித்தான் மறுபடியும் உச்ச நீதிமன்றதுக்கு போனோம். அதில்தான் இப்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமாத்திரமல்ல, தூக்குத் தண் டனையை நிறைவேற்று வதற்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் தெளிவான தீர்ப்பை எழுதி இருக்கிறது நீதிமன்றம். தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிராக நடத்தப்பட்ட இயக்கங்களும் சட்ட மன்ற தீர்மானமும் மரண தண்டனைக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலும் தான் இத்தகைய தீர்ப்பு எழுதப்படுவதற்கு முக்கியக் காரணம்” என்று சொன்னார்.

SCROLL FOR NEXT