இந்திய புலனாய்வு அமைப்புகளின் தேசிய மாநாடு, டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதைத் தடுக்க, தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. மேலும், ரகசிய புலனாய்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தீவிரவாதிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கேற்ப சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தையும் தேசிய புலனாய்வு கழக சட்டத்தையும் மத்திய அரசு பலப்படுத்த உள்ளது.
சமூக வலைதளங்களை தீவிர வாதிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதை தடுக்கவும், தீவிரவாதிகளின் சதித் திட்டங் களை முன்கூட்டிய கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் ‘இண்டி யன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (செர்ட்-இன்), சென்ட்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் (சி-டேக்) ஆகியவற்றையும் மத்திய அரசு பலப்படுத்தும்.
தலித்துகள் மேம்பாடு மற்றும் அவர்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற விஷயங்களில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏதாவது பிரச்சினையில் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி போலீஸ் நிலையத்தை தலித்துகள் அணுகும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதற்காக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தோர் (சித்ரவதைகளில் இருந்து தடுத்தல்) சட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நேர்மையான முறையில் விசாரிக்க, நாட்டில் உள்ள 564 மாவட்டங்களிலும் விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணை அமைப்பில் 3-ல் ஒரு பங்கினர் பெண்கள் இடம்பெறுவார்கள். இந்த அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசும் மாநில அரசும் 50 50 என்ற முறையில் ஒதுக்கீடு செய்யும். இந்த அமைப்புகளுக்காக அடுத்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.324 கோடியை செலவிடும். இந்த விசாரணை அமைப்புகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றுக்கு தீர்வு காண இந்த மாநாட்டில் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.