அர்விந்த் சுப்பிரமணியன் ஒரு தேசபக்தர் என அரசே சொல்வதால் அவர் மீதான என் விமர்சனத்தை தற்காலிகமாக 'ரத்து' செய்கிறேன் என சுப்பிரமணியன் சுவாமி இன்று (வியாழக்கிழமை) தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை தொடர்ந்து அரவிந்த் சுப்பிரமணியன் மீதும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனத்தை முன்வைத்தார். அரவிந்த் சுப்பிரமணியன் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "அதிகாரிகள் மீது அரசியல்வாதிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். அரசுக்கு அருண் சுப்பிரமணியன் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரது ஆலோசனை மதிப்புமிக்கது" என்று அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இன்று (வியாழக்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு இந்தியர், இந்திய தேசத்துக்கு விரோதமாகவே ஒரு வெளிநாட்டுக்கு ஆலோசனை சொல்லியும் அவரை தேசபக்தர் என்றே இந்த நாடு கருதுமேயானால், நான் என் கருத்தை ரத்து செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது ட்வீட்டில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு அர்விந்த் சுப்பிரமணியம் யார் என்று தெரியும். இருந்தாலும் அவர் இத்தேசத்துக்கு மிகப்பெரிய சொத்து என்று கருதினால் என் கருத்து மெய்யாகும் காலம் வரை காத்திருக்கிறேன். அது வரை என் கருத்தை ரத்து செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அருண் ஜேட்லியின் விளக்கத்துக்குப் பின்னரும்கூட சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்துக்கு சற்றும் வருந்தவில்லை. மாறாக அர்விந்த் மீதான நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.