இந்தியா

ஆந்திராவில் படகு கவிழ்ந்து 9 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள், 9 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலியாயினர். மேலும் காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குந்தக்கல் மண்டலம், வைட்டிசெருவு ஏரியில் நேற்று மாலையில் 19 பேர் படகில் பயணம் செய்தனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பெண்கள், 9 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலியாயினர். ஒருவர் நீச்சல் அடித்துக்கொண்டு உயிர் தப்பி உள்ளார்.

அரசு நிவாரணம்

மேலும் காணாமல் போன 4 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக குந்தக்கல் போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரியவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT