பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து கமல்நாத் விலகியதற்கு, அவரது சொந்த விருப்பமே காரணம் என காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக கமல்நாத் நியமிக்கப்பட்டார்.
ஆனால், 1984-ம் ஆண்டு சீக் கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான விவகாரத்தில் கமல் நாத்துக்கு தொடர்பிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து தனது பொறுப்பை கமல்நாத் ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது: கமல்நாத்தை நீக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸுக்கு ஏற்படவில்லை. தேர்தலை மனதில் கொண்டு கமல்நாத்துக்கு எதிராக எதிர்க் கட்சிகள் நேர்மையற்ற, தவறான, குறுகிய மனப்பான்மையுடனான புகாரை முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து சுய விருப்பத்தின் பேரிலேயே கமல்நாத் பஞ்சாப் மேலிட பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனினும், காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஹரியாணா பொறுப் பாளராக அவர் தொடர்வார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.