இந்தியா

எடியூரப்பாவின் போராட்டத்தில் நேர்மை இல்லை: கர்நாடக முதல்வர்

செய்திப்பிரிவு

''இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் எடியூரப்பாவின் போராட்டத்தில் நேர்மை இல்லை. அரசியல் ஆதாயத்திற்காகவே அவர் கர்நாடக அரசிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடக அரசு கடந்த மாதம் சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய பெண்களின் திருமண உதவித்தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கும் ''ஷாதி பாக்யா' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் உதவும் கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பெங்களூரில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து தனது கர்நாடக ஜனதா கட்சியினருடன் தர்ணா போராட்டத்திலும் குதித்தார்.

இந்நிலையில் எடியூரப்பாவின் தொடர் போராட்டம் குறித்து பெங்களூரில் செவ்வாய்கிழமை கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'ஷாதி பாக்யா' திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்ற எடியூரப்பாவின் கோரிக்கையை ஒருபோதும் ஏற்க போவதில்லை.

சிறுபான்மையினருக்கு எதிரான எடியூரப்பாவின் தர்ணாவை கர்நாடகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்'' என கோபத்துடன் கூறினார்.

SCROLL FOR NEXT