இந்தியா

மன்மோகன் பற்றிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு: மக்களின் குளியலறையை எட்டிப்பார்க்க விரும்பும் மோடி -ராகுல் காந்தி கடும் தாக்கு

பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சமாஜ்வாதி காங்கிரஸ் சார்பில் 10 அம்ச குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை முதல்வர் அகிலேஷ் ராகுல் காந்தி இணைந்து நேற்று வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘பிரதமர் மோடி தனது பணிகளை செய்வதில்லை. அதற்குப் பதில் பொதுமக்களின் குளியல் அறையை எட்டிப்பார்க்க விரும்புகிறார்’’ என்றார்.

மாநிலங்களவையில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசும்போது, பண மதிப்பு நீக்கம் சட்டப்பூர்வமான கொள்ளை என்று மன்மோகன் சிங் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மோடி பேசும்போது, ‘‘மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில்தான் பல ஊழல்கள் நடந்தன. ஆனால் அவர் கறை படியாமல் இருக்கிறார். அவர் மழைக்கோட்டு (ரெயின்கோட்) அணிந்து கொண்டு குளிக்கும் வித்தையை அறிந்தவர்’’ என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், ராகுல் காந்தி நேற்று மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் ஹரித்துவாரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேசும்போது, ‘‘உங்கள் நாவை அடக்கிக் கொள்ளுங்கள். உங்கள் (ராகுல்) முழு ஜாதகமும் என்னிடம் உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் கூறும்போது, ‘‘ஜோசியம் படிப்பதில் மோடிக்கு விருப்பம். மக்கள் குளியலறையை எட்டிப்பார்க்க விருப்பம், கூகுளில் ஆராய்ந்து பார்க்க விருப்பம். ஆனால், பிரதமர் என்ற முறையில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். நீங்கள் 2 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறீர்கள். காங்கிரஸ் பற்றிய ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங் கள். என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்’’ என்று பகிரங்களாக சவால் விடுத்தார்.

SCROLL FOR NEXT