அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதற்கு ஆதார் அடையாள எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அணுகின.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டை விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
'ஆதார் அட்டை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், பல்வேறு சமூக நலத்திட்டங்களில் முக்கியமாக கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தில் பிரச்னை ஏற்படுகிறது.
ஆதார் அட்டை மூலம்தான் கேஸ் மானியம் தவறாப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். 76 சதவீத கேஸ் பயனீட்டாளர்கள் ஆதார் அட்டை மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் நலன் பாதிக்கப்படும்' என்று அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர்.
எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
முன்னதாக, அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டயம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி புட்டுசாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.செளகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு அளித்த பதிலில், ஆதார் அட்டை பெற்றுக் கொள்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஆதார் அட்டை வழங்குவதில் மக்களிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அரசின் எந்தவொரு சலுகைத் திட்டம், மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயம் இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.
அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவைப் பரீசிலிக்கும்படி, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்தன.
எண்ணெய் நிறுவனங்களின் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, தனது முந்தைய உத்தரவில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இது, மத்திய அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
விரல் ரேகை, விழித் திரையைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை திட்டம் 2009-ல் தொடங்கப்பட்டது. இதற்காக இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனியைத் தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) உருவாக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக இதுவரை ரூ.50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.