யோகாவை மிகப் பெரிய இயக்கமாக உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி சண்டீகரில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. தவிர நாடு முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கடிதம் அனுப்பினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சர்வதேச யோகா தினம் வெறும் எளிமையான நிகழ்ச்சியல்ல. நமது வாழ்க்கையுடன் யோகாவையும் ஒருங்கிணைக்கும் ஒரு வழியாகும். சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் வயது பேதங்கள் இல்லாமல் யோகாவை பிரபலப் படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். எனவே அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் யோகா நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை பங்கேற்க வைக்க வேண்டும். இது ஒரு மக்கள் நிகழ்ச்சி. யோகாவால் மனம், உடல் வலுபெறுவதுடன் சமூக நல்லணிக்கமும் ஏற்படும். மாநில அரசுகளும் யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்புகளை பயன்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எனவே யோகாவை மிகப் பெரிய இயக்கமாக உருவாக்க அனை வரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.