மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவுக்கும் அவருடைய மகன் கார்த்திக் கவுடாவுக்கும் நெருக்கமான 5 பேரின் தொலைபேசி, செல்போன் உரையாடல்களை பெங்களூர் போலீஸார் ஒரு வாரத்துக்கும் மேலாக ஒட்டுக் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறிய தாவது:
கன்னட திரைப்பட நடிகை மைத்ரி கவுடா மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டார் என கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெங்களூர் போலீஸார், கார்த்திக் கவுடாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கார்த்திக் கவுடாவின் செல்போனை ஒட்டுக்கேட்டு அவரை கைது செய்ய பெங்களூர் போலீஸார் திட்டமிட்டனர்.
சதானந்த கவுடாவின் அண்ணன் பாஸ்கர் கவுடா, அரசியல் உதவியாளர் திம்மே கவுடா, சதானந்த கவுடா மனைவியின் உறவினர் கவுதம், கார்த்திக் கவுடாவின் கல்லூரி நண்பர் முரளி, சதானந்த கவுடாவின் நெருங்கிய நண்பர் அசோக் பை ஆகிய 5 பேரின் செல்போன், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
பெங்களூர் போலீஸார் 5 பேரின் செல்போன் எண்களை செப்டம்பர் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஒட்டுக்கேட்க சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு அனுமதி கடிதம் எழுதியுள்ளனர். இந்த தேதிகள் தவிர வேறு சில தேதிகளிலும் அவர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக சில கடிதங் களும் ஆடியோ பதிவுகளும் சிக்கியுள்ளன.
உள்துறைச் செயலர் மறுப்பு
இது தொடர்பாக கர்நாடக மாநில உள்துறைச் செயலர் எஸ்.கே. பட்நாயக் கூறும் போது, ‘‘கார்த்திக் கவுடா விவகாரத்தில் யாருடைய தொலைபேசி, செல்போனும் ஒட்டுக்கேட்கவில்லை.'' என மறுத்தார்.