இந்தியா

பிரதமர் மீதும் விசாரணை தேவை: அருண் ஜேட்லி

செய்திப்பிரிவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணையில், பிரதமர் மன்மோகன் சிங்கை விலக்கிவைக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றுள்ள அவர், நியூயார்க்கில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடு என அடுத்தடுத்து ஊழல் விவகாரங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்பு நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க பரிந்துரைத்த அந்தத் துறையின் முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுரங்கங்களை ஒதுக்கிய அத்துறையின் அப்போதைய அமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமரை விலக்கிவைக்கவே முடியாது. அவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார் அருண் ஜேட்லி.

SCROLL FOR NEXT