இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: எச்1பி விசா கவலை வேண்டாம் - சுஷ்மா ஸ்வராஜ்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:

பாஜக பாகுபாடு காட்டாது

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: உத்தரபிரதேசத்தில் பெண்கள் கேலி செய்யப்படுவதைத் தடுப்பதற்காக காவல் துறை சிறப்புப் படை (ஆன்டி ரோமியோ) அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையினர், சில குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன் குற்றம்சாட்டினார். சாதி, மத அடிப்படையில் பாஜக பாகுபாடு காட்டாது. உ.பி.யில் பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்து சில நாட்கள்தான் ஆகிறது. எனவே, விரும்பத்தகாத சம்பவம் ஏதேனும் நடந்தால் அதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

பள்ளி செல்லாத நெசவாளர்கள்

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: நாடு முழுவதும் உள்ள நெசவாளர் குடும்ப உறுப்பினர்களில் 30 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1 சதவீதத்தினர் மட்டுமே பட்டப் படிப்பை முடிக்கின்றனர். எனவே, நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி வழங்குவதற்காக இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) ஆகியவற்றுடன் கைத்தறி வளர்ச்சி ஆணையர் கடந்த ஆண்டு இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்துள்ளார்.

இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்காது

மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட்: கல்வி, வேலை வாய்ப்பில் இப்போது 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவில் கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. மேலும் இட ஒதுக்கீடை பாஜக ஆதரிக்கிறது. வரும் காலத்திலும் இது தொடரும்.

எச்1பி விசா கவலை வேண்டாம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்1பி விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மசோதாக்கள் நிறைவேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, எச்1பி விசா அல்லது பணி பாதுகாப்பு பற்றி இந்திய ஐடி ஊழியர்கள் இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை என்றார்.

அமெரிக்க தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்று அதிபரானார். அதன்பிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலை செய்வதை அனுமதிக்கும் எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாட்டினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT